Thursday, September 28, 2006

ஆள் மாறாட்டம்

எனது பெயரிலேயே எனக்கு ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி கிடைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நான் பெறும் ஆள் மாறாட்ட மின்னஞ்சல்கள் நிறைய.
என் பெயருடைய யாரோ ஒரு மணமகனுக்காக அனுப்பப்படும் மணப்பெண்களின் புகைப்படங்கள், வெளிநாடு சென்று படிக்கின்ற தன் பழைய மாணவனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அனுப்பி வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தன் அராய்ச்சிக் கட்டுரைக்கு பதில் அனுப்பாததற்காக, 'வெளி நாடு சென்றதும் நீ மாறி விட்டாய். நன்றியில்லாத பயல்' என்பதான திட்டுக்கள், அய்.சி அய்.சி வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பச் சொல்லும் உறவுகளின் மின்னஞ்சல்கள் எனப்பல.
நான் ஆரக்கிள் தேர்வுக்குப் பணம் கட்டி விண்ணப்பித்தபோது என்னுடைய மின்னஞ்சல் முகவரியைச் சரியாகக் கவனிக்காமல் தவறான ஒரு மின்னஞ்சல் முகவரிக்குத் தேர்வு நாள் விவரங்களை அனுப்பிவிட்டு , நான் தேர்வுக்கு வராத காரணத்தால் எனக்கு பணம் இழக்கச் செய்ததோடு அல்லாமல் தான் செய்தது சரியே என்றும் வாதிட்டாள் 'பொறுப்பான ' பெண்ணொருத்தி. [பிறகு நான் அதிகம் பொங்கியபோது தான் பணம் கட்டுவதாகவும் , ஆனால் தில்லிக்கு அருகிலிருக்கும் நான் பெங்களூர் வந்து தேர்வெழுத வேண்டும் எனச் சொல்லி கழித்துக் கட்டினாள் !!. ]
இன்று மின்னஞ்சல் என்பது ஒரு மாற்றுத் தொடர்பு வழியாக எறக்குறைய மாறி விட்டபின்னும், மின்னஞ்சல் அனுப்புவர்களின் கவனக்குறைவு பலபேருக்கு பலவிதமான இடைஞ்சல்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. [நான் இங்கு spam பற்றிப் பேசவில்லை.]
நேர இழப்பு, பண இழப்பு மட்டுமல்லாமல் நட்பையும் உறவுகளையும் கூட சிலர் இழக்க நேரலாம். தவறான மின்னஞ்சலுக்குத் தன் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி விட்டுத் தன் மாணவன் மீது ஆத்திரம் கொண்டுள்ள , நான் மேலே குறிப்பிட்ட ஒரு பேராசிரியர் இதற்கு ஒரு உதாரணம்.

Saturday, September 23, 2006

ஓடைக்கு வெளியே

இத்தனை நாட்களாக என் கருத்துக்களை வெளியிட ஓடை வலைப்பதிவை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். ஓடை மின்னிதழுக்குத் தொடர்பில்லாத பொதுவான கருத்துக்கள் / எதிர்வினைகள் போன்றவற்றையும் ஓடை வலைப்பதிவில் எழுதி வந்ததால் ஓடை மின்னிதழ் தனக்குரிய தனித்தன்மையில் குறைவதாய் எனக்கொரு உறுத்தல் இருந்து வந்தது. இதனைக் களைந்து, எனக்கான தனி ஒரு களமாக இந்த புதிய வலைப்பதிவைத் துவங்கியுள்ளேன். இதன் மூலம் ஓடை பலருடைய (நான் உள்பட) கருத்துக்களைத் தாங்கி வரும் ஒரு தனி மின்னிதழாகத் தொடர்ந்து விளங்கும்.
ஓடை வலைப்பதிவில் இருந்து சில கருத்துக்களை வெளியே எடுத்து இங்கே இட்டுள்ளேன். என்னுடைய கருத்துக்கள் தொடர்ந்து இங்கும், ஓடையிலும் வெளியாகும்.