Wednesday, December 06, 2006

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
துக்கடாவில் கொஞ்சம் வைக்கோப்புல்லாம்
வைக்கோபுல்ல மாட்டுக்குப் போட்டா
மாடு பால் கொடுத்ததாம்
பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
கல்லெல்லாம் பாம்பாம்
பாம்படிக்கத் தடியத் தேடினா
தடியெல்லாம் சேறாம்
சேறு கழுவ ஆத்துக்குப் போனா
ஆறெல்லாம் மீனாம்
மீனப்புடிக்க வலைக்குப் போனா
வலையெல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்
கதை கதையாம் காரணமாம்


என்னடா ஊருக்குப் பொகும் வரை நன்றாகத்தானே இருந்தான், திரும்பி வந்ததும் இப்படி ஏதோ உளருகிறானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

'எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் அவன் என்னைப் போலவே இருக்கிறான்!'

நான் ஊருக்குப் போனதும் அதை ஒட்டித்தான். தாயும் சேயும் நலமே.

குழந்தைகளுடனான என் அருகாமை ஒன்றும் புதிதல்ல. என் பெரிய அக்காவின் இரண்டு குழந்தைகள்,சின்ன அக்காவின் குழந்தைகள், அண்ணனின் குழந்தை என்று நிறையக் குழந்தைகள் பிறந்து என் கண்முன்னே வளர்ந்தார்கள்.
அவர்கள் மட்டுமல்லாது ஆட்டுக் குட்டிகள், நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் என்று பலவும் எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்தன.
பெரும்பாலும் மனிதக் குழந்தைகள் மட்டுமே விளையாட்டு, குறும்பு,பாசம் காட்டுதல், கோபித்துக் கொள்ளுதல் அடம் பிடித்தல் போன்ற குணங்களை வெளிக்காட்டுவார்கள் என்று நாம் நினைப்பது தவறு. இந்த இயல்புகளை நீங்கள் ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி,பூனைக்குட்டி, மாட்டுக் கன்றுகளிடமும் பார்க்கலாம். ஆனால் நாம் பெரும்பாலும் இவற்றின் செய்கைகளைக் கூர்ந்து கவனிப்பது இல்லை என்பதே உண்மை.

இதனாலேயே எனக்கு முதற் குழந்தை (மெல்லிசை -தற்போது 2 வயது) பிறந்தபோது மற்றவர்களுக்கு ஏற்பட்ட 'தலைகால் புரியாத - இன்ம்புரியாத பரவசம்' எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஏற்படாதது ஏதோ ஒரு பெருங்குறை என்பது போல என் நண்பர்கள் சிலரும் என்னிடம் கோபித்துக் கொண்டார்கள்.
மேலே சொன்ன பாட்டு (?) என் அக்காவின் சின்ன மகள் (கயல்விழி - 3 வயது) என்னிடம் தன் மழலை மொழியில் குழறிய ஒன்று.
திரும்பி வந்ததும் குழந்தைகளுக்கான பாட்டு, கதை என்று என்னைத் தேட வைத்தது இந்தப்பாட்டுதான்.
என் மகள் செய்த, செய்து வருகிற சேட்டைகளையும் வரும் நாட்களில் எழுதுவேன்

3 Comments:

At 3:53 pm, December 06, 2006 , Blogger ரவி said...

உங்க குழந்தைக்கு மெல்லிசைன்னா பேரு வெச்சிருக்கீங்க...அருமையான பெயர்...வாழ்த்துக்கள்...

 
At 4:23 pm, December 06, 2006 , Blogger ரவி said...

உங்கள் மடல்கண்டு நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறேன்...

என் அப்பாவின் நன்பர் ஒருவர் இரண்டு வயது மகள் ( ஆறு ஆண்டுக்கு முன் சந்தித்தேன்) பெயர் - தென்றல்...

மகன் பெயர் : பண்பாளன்...

இன்னும் மனதிலேயே நிற்கிறது அந்த சுட்டிகளின் பெய்ரும் முகமும்..

 
At 4:31 pm, December 06, 2006 , Blogger கைகாட்டி said...

நன்றி இரவி.
இந் த மாதிரி நிறைய நல்ல எளிமையான தமிழ்ப் பெய்ரக்ள் இருக்கின்றன.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home