Friday, January 07, 2005

பத்திரிக்கைச் சுதந்திரம் !

நான் வெகு நாட்களாகவே கவனித்து வருகிறேன். சில செய்தித்தாள் / செய்தி நிறுவனங்கள் செய்தி படிப்பவர்களைத் திசை திருப்பும் வகையில் / செய்திக்கு ஒரு திடீர் முக்கியத்துவம் ஏற்படும் வகையில் செய்தியின் தலைப்புகளை வைக்கின்றன. 2 மாதங்களுக்கு முன்னால் ஒரு தமிழ் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. ' 'XY' கற்பழிப்பு - வழக்கில் திருப்பம் '. இங்கு 'XY' என்று நான் குறிப்பிட்டது ஒரு முன்னாள் நடிகையின் பெயர். ஆனால் செய்திக்கு உள்ளே இருப்பது 'XYZ' கற்பழிப்பு வழக்கு!இன்றும் rediff-ல் ஒரு செய்தி, கிரிக்கெட் வீரர் பாலாஜியைப் பற்றி.

வணக்கம்

ஆறேழு மாத இடைவெளிக்குப் பின்னர் திரும்ப வலையில் பதிய வந்தாயிற்று.கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் நான் சென்னை வந்து சேர்ந்தேன்.தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது ஏராளமான மக்கள் பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி என்று பெருந்துகளில் தொற்றிக் கொண்டிருந் தனர். பேருந்தில் நிற்கக் கூட இடமில்லை என்று சொல்லி ஏறக்குறைய 2 மணி நேரமாய்க் காத்துகிடந்து ஒரு வழியாய் ஊர் போய்ச்சேர்ந்தேன். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும் வேலை செய்யவில்லை. மறுநாள் மாலை என் அக்கா 'நல்ல படியா வந்து சேர்ந்தியா, நீ வந்த வழியில ஒன்னும் பிரச்சினை இல்லையா?' என்று கேட்கின்ற வரையில் எனக்குத் தெரியாது, முந்தின நாள் தாம்பரத்தில் என் கண்முன்னால் பேருந்துகளுக்குள் தங்களைத் திணித்துக் கொண்டிருந்தவர்களில் நிறையப் பேர் திரும்பவரப் போவதில்லை என்று. எத்தனை ஆறுதல் சொல்லியும் யாருக்கும் நாம் இழந்த உயிர்களைத் திரும்பக் கொண்டு வந்து தர இயலாது என்றாலும் நம்மால் முடிந் த அளவுக்கு பண /பொருள் உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். குமரிக்கணடம் கடலுக்குள் தொலைந்தது, பூம்புகாரைக் கடல் கொண்டது என்பதெல்லாம் வெறும் புனைகதைகள் என்று ஒதுக்கியவர்கள் தங்கள் எண்ணத்தை மறுஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்தோனேசியா வேண்டாம், குறைந்தபட்சம் அந்தமானில் அழிவு ஏற்பட்டபோதாவது நம் வானியல் / கடலியல் அதிகாரிகள் தங்கள் தூக்கத்திலிருந்து விழித்திருந்தால் கூட நிறைய உயிர் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். கூலிக்கு மாரடிக்கும் இந்த மாதிரியான முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல், முரளி மனோகர் ஜோஷிக்கு தகவல் அனுப்பினார்கள் என்று ஒரு செய்தித்தாளில் படித்தபோது எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. வானொலி நேர்முகம் ஒன்றில் நாகப்பட்டினம் விவசாயிகள் பலர் காலை 6-7 மணிக்கே குட்டைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் வித்தியாசமான அதிர்வுகளைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்தபோது இது எப்படி தொடர்புடையவர்களுக்குத் தெரியாமல் போனது என்றொரு ஆதங்கம் எழுந்தது. 'படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் ' என்ற பாரதியின் சாபம் பொய்தானா?